பின்பக்க உறை

திருமதி. அடேல் பாலசிங்கம் ஒரு எழுத்தாளர்; சமுகவியலாளர்; அரசியற் செயற்பாட்டாளர். தமிழீழ மக்களின் தேச சுதந்திர இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றார். தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் வாழ்ந்து, தமிழ் சமூகக் கட்டமைப்புப் பற்றி நன்கறிந்தவர். விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பற்றியும், யாழ்ப்பாண சமூகத்தில் நிலவும் சீதன முறைமை பற்றியும் நூல்கள் எழுதி வெளியிடட்டவர்.
திருமதி. அடேல் பாலசிங்கம் எழுதிய “சுதந்திர வேட்கை” என்ற இந்தப் புதுமையான நூல் விடுதலைப் புலிகளின் போராட்ட வாழ்வை, உள்ளிருந்த பார்வையாக ஆழமாகத் தரிசிக்கிறது. சுயசரித விவரண மாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்ட இந் நூலில், விடுதலைப் புலிகள் பற்றி இதுவரை வெளிவராத பல்வேறு சுவையான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகாலமான தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் படிநிலை வளர்ச்சியில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும், திருப்பங்களையும் இந்நூல் துல்லியமாக எடுத்துக் கூறுகிறது. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பற்றியும் முற்றிலும் புதிய சுவாரஸ்யமான தகவல்களும் இதில் உண்டு. மிகவும் கொந்தளிப் பான கால கட்டங்களையும், அக் காலங்களில் கட்டவிழ்ந்த அவலமான நிகழ்வுகளையும், சுதந்திரம் வேண்டிநிற்கும் போராளிகளதும், பொது மக்களதும் ஆழமான உணர்வலைகளையும், உறுதிப்பாட்டையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவரும் படிக்கவேண்டிய அபூர்வமான நூல் இது.
ISBN 1-903679-02-8